சங்கீதம் 118 – Psalms Chapter 118

Psalms Chapter 118

சங்கீதம் அதிகாரம் 118

1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

2. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.

3. அவர் கிருபை என்றுமுள்ளதென்று ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

4. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.

5. நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

6. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

7. எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.

8. மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

9. பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

10. எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

11. என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

12. தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

13. நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்.

14. கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானார்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

15. நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தமுண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

16. கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

17. நான் சாவாமல், பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.

18. கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

19. நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.

20. கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.

21. நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால் நான் உம்மைத் துதிப்பேன்.

22. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

23. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

24. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

25. கர்த்தாவே, இரட்சியும், கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.

26. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

27. கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.

28. நீர் என்தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

29. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =