சங்கீதம் 73 – Psalms Chapter 73

Psalms Chapter 73

சங்கீதம் அதிகாரம் 73

1. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.

2. ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.

3. துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.

4. மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.

5. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.

6. ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.

7. அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.

8. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.

9. தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

10. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.

11. தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.

12. இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.

13. நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.

14. நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

15. இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

16. இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,

17. அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.

18. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.

19. அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.

20. நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.

21. இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.

22. நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.

23. ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

24. உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

25. பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

26. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

27. இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.

28. எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =