சங்கீதம் 59 – Psalms Chapter 59

Psalms Chapter 59

சங்கீதம் அதிகாரம் 59

1. என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.

2. அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.

3. இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.

4. என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.

5. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.)

6. அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

7. இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.

8. ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.

9. அவன் வல்லமையை நான் கண்டு உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.

10. என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.

11. அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.

12. அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.

13. தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவரென்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)

14. அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

15. அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

16. நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

17. என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =