சங்கீதம் 37 – Psalms Chapter 37

Psalms Chapter 37

சங்கீதம் அதிகாரம் 37

1. பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.

2. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.

3. கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

4. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

5. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

6. உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.

7. கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

8. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.

9. பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

10. இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

11. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

12. துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.

13. ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

14. சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

15. ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.

16. அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

17. துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

18. உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

19. அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

20. துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.

21. துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.

22. அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

23. நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

25. நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

26. அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

27. தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.

28. கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

29. நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.

30. நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

31. அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

32. துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

33. கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.

34. நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.

35. கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

36. ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.

37. நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.

38. அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

39. நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.

40. கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + five =