சங்கீதம் 17 – Psalms Chapter 17

Psalms Chapter 17

சங்கீதம் அதிகாரம் 17

1. கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

2. உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.

3. நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.

4. மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.

5. என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.

6. தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.

7. உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.

8. கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

9. என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

10. அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.

11. நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.

12. பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

13. கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.

14. மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.

15. நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 13 =