சங்கீதம் 71 – Psalms Chapter 71

Psalms Chapter 71

சங்கீதம் அதிகாரம் 71

1. கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்.

2. உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.

3. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.

4. என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.

5. கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.

6. நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.

7. அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.

8. என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.

9. முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.

10. என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

11. தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.

12. தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

13. என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.

14. நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

15. என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.

16. கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.

17. தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

18. இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.

19. தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?

20. அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.

21. என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.

22. என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன்.

23. நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.

24. எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =