சங்கீதம் 65 – Psalms Chapter 65

Psalms Chapter 65

சங்கீதம் அதிகாரம் 65

1. தேவனே சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.

2. ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

3. அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.

4. உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

5. பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.

6. வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,

7. சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.

8. கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.

9. தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.

10. அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.

11. வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.

12. வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.

13. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + six =