Job Chapter 13
யோபு அதிகாரம் 13
1. இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
2. நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
3. சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
4. நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
5. நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
6. நீங்கள் என் நியாயத்தைக்கேட்டு என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
7. நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
8. அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
9. அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?
10. நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
11. அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
12. உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,
13. நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன் எனக்கு வருகிறது வரட்டும்.
14. நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
15. அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
16. அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
17. என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
18. இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
19. என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
20. இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
21. உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
22. நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
23. என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
24. நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.
25. காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
26. மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
27. என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
28. இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற, வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.