யோபு 15 – Job Chapter 15

Job Chapter 15

யோபு அதிகாரம் 15

1. அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:

2. ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,

3. பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?

4. நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.

5. உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.

6. நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.

7. மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?

8. நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?

9. நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?

10. உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.

11. தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ?

12. உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?

13. தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.

14. மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

15. இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

16. அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

17. உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும், நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.

18. ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.

19. அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.

20. துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.

21. பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்.

22. இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.

23. அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

24. இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.

25. அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.

26. கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.

27. அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.

28. ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.

29. அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை, அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.

30. இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்.

31. வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.

32. அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.

33. பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப்போலவும் அவன் இருப்பான்.

34. மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

35. அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 15 =