யோபு 7 – Job Chapter 7

Job Chapter 7

யோபு அதிகாரம் 7

1. பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?

2. ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,

3. மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.

4. நான் படுத்துக் கொள்கிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்குவெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது.

5. என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.

6. என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.

7. என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.

8. இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.

9. மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.

10. இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.

11. ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.

12. தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?

13. என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,

14. நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.

15. அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது.

16. இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன், எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.

17. மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,

18. காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

19. நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.

20. மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?

21. என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =