1 நாளாகமம் 13 – 1 Chronicles Chapter 13

1 Chronicles Chapter 13

1 நாளாகமம் அதிகாரம் 13

1. தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,

2. இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆளனுப்பி,

3. நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.

4. இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.

5. அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,

6. கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்.

7. அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.

8. தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.

9. அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.

10. அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

11. அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,

12. அன்றையதினம் தேவனுக்குப்பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,

13. பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின்வீட்டிலே சேர்த்தான்.

14. தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 7 =