1 நாளாகமம் 5 – 1 Chronicles Chapter 5

1 Chronicles Chapter 5

1 நாளாகமம் அதிகாரம் 5

1. ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

2. யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியிலுண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.

3. இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.

4. யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய்.

5. இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால்.

6. இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.

7. தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,

8. யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும்; நேபோமட்டும், பாகால்மயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள்.

9. கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.

10. சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.

11. காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள்.

12. அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பானும் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.

13. அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.

14. இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.

15. கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.

16. அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும் அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள்மட்டும் வாசம்பண்ணினார்கள்.

17. இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை, ஏற்றப்பட்டார்கள்.

18. ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க, சேவகர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

19. அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,

20. அவர்களோடே எதிர்க்கத் துணைபெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

21. அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.

22. யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.

23. மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான்தொடங்கிப் பாகால் எர்மோன்மட்டும், செனீர்மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.

24. அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.

25. அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச ஜனங்களின் தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்.

26. ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும், காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − ten =