1 சாமுவேல் 27 – 1 Samuel Chapter 27

1 Samuel Chapter 27

1 சாமுவேல் அதிகாரம் 27

1. பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

2. ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகிஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

3. அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.

4. தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.

5. தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.

6. அப்பொழுது ஆகீஸ்: அன்றைய தினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

7. தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.

8. அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர்மேலும் கெஸ்ரியர் மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப்போனார்கள்; சூருக்குப் போகிற எல்லைதுவக்கி எகிப்துதேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே.

9. தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.

10. இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.

11. இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.

12. ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =