1 Samuel Chapter 17
1 சாமுவேல் அதிகாரம் 17
1. பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.
2. சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
3. பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
4. அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
5. அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.
6. அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.
7. அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.
8. அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.
9. அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம்; நான் அவனை ஜெயித்து கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து, எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி,
10. பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான்.
11. சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.
12. தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.
13. ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.
14. தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.
15. தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
16. அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.
17. ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,
18. இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.
19. அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
20. தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
21. இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.
22. அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
23. அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.
24. இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.
25. அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.
26. அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
27. அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.
28. அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
29. அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,
30. அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.
31. தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.
32. தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.
33. அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்.
34. தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
35. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்த போது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன்.
36. அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
37. பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.
38. சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.
39. அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக் கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
40. தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஜந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.
41. பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்கு கிட்டிவந்தான்; பரிசையை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
42. பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.
43. பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
44. பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.
45. அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
46. இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.
47. கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
48. அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
49. தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
50. இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.
51. ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.
52. அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
53. இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள்.
54. தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.
55. தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
56. அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான்.
57. தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.
58. அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.