1 சாமுவேல் 19 – 1 Samuel Chapter 19

1 Samuel Chapter 19

1 சாமுவேல் அதிகாரம் 19

1. தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.

2. சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.

3. நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

4. அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே.

5. அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.

6. சவுல் யோனத்தனுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.

7. பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன் போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

8. மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.

9. கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

10. அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

11. தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீ இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீ கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி,

12. மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.

13. மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.

14. தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

15. அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.

16. சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

17. அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

18. தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

19. தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

20. அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

21. இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

22. அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

23. அப்பொழுது ரமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,

24. தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =