1 நாளாகமம் 22 – 1 Chronicles Chapter 22

1 Chronicles Chapter 22

1 நாளாகமம் அதிகாரம் 22

1. அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்கதகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.

2. பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.

3. தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,

4. எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

5. தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.

6. அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,

7. சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.

8. ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.

9. இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.

10. அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

11. இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.

12. கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.

13. கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

14. இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.

15. வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும் எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.

16. பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

17. தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது.

18. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும் தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.

19. இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 13 =