1 நாளாகமம் 14 – 1 Chronicles Chapter 14

1 Chronicles Chapter 14

1 நாளாகமம் அதிகாரம் 14

1. தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

2. கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

3. எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

4. எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

5. இப்கார், எலிசூவா, எல்பெலேத்,

6. நோகா, நெப்பேக், யப்பியா,

7. எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

8. தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.

9. பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

10. பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர் போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

11. அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

12. அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.

13. பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.

14. அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

15. முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.

16. தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.

17. அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 1 =