சங்கீதம் 88 – Psalms Chapter 88

Psalms Chapter 88

சங்கீதம் அதிகாரம் 88

1. என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

2. என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.

3. என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

4. நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.

5. மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.

6. என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.

7. உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகளெல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)

8. எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.

9. துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.

10. மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)

11. பிரேதக்குழியில் உமது கிருபையும் அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?

12. இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?

13. நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.

14. கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?

15. சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.

16. உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.

17. அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.

18. சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =