சங்கீதம் 39 – Psalms Chapter 39

Psalms Chapter 39

சங்கீதம் அதிகாரம் 39

1. என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

2. நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;

3. என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம்செய்தேன்.

4. கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.

5. இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

6. வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

7. இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.

8. என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.

9. நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.

10. என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.

11. அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)

12. கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

13. நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =