எரேமியா 52 – Jeremiah Chapter 52

Jeremiah Chapter 52

எரேமியா அதிகாரம் 52

1. சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.

2. யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

3. எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

4. அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

5. அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

6. நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல் போயிற்று.

7. நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.

8. ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.

9. அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.

10. பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

11. சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளைப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

12. ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

13. அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

14. காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

15. ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

16. ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.

17. கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

18. செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

19. பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.

20. சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.

21. அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.

22. அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.

23. தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.

24. காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

25. நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

26. அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.

27. அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

28. நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,

29. நேபுகாத்நேச்சாருடைய பதினெட்டாம் வருஷத்தில் எருசலேமிலிருந்து எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்களும் கொண்டுபோகப்பட்டார்கள்.

30. நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

31. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

32. அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாக வைத்து,

33. அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.

34. அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =