லேவியராகமம் 18 – Leviticus Chapter 18

Leviticus Chapter 18

லேவியராகமம் அதிகாரம் 18

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

2. நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

3. நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,

4. என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

5. ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.

6. ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.

7. உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.

8. உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.

9. உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.

10. உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது அது உன்னுடைய நிர்வாணம்.

11. உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.

12. உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.

13. உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.

14. உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.

15. உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.

16. உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.

17. ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.

18. உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.

19. ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.

20. பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.

21. நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.

22. பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.

23. யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.

24. இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

25. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.

26. இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.

27. இப்பொழுது உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,

28. நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம்.

29. இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.

30. ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eight =