சங்கீதம் 55 – Psalms Chapter 55

Psalms Chapter 55

சங்கீதம் அதிகாரம் 55

1. தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.

2. எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.

3. அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.

4. என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.

5. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

6. அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.

7. நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)

8. பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.

9. ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

10. அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;

11. கேடுபாடுகள் அதின் நடுவிலிருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியை விட்டு விலகிப்போகிறதில்லை.

12. என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

13. எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.

14. நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.

15. மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.

16. நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

17. அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.

18. திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரே எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

19. ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா.)

20. அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

21. அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

22. கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

23. தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =