சங்கீதம் 50 – Psalms Chapter 50

Psalms Chapter 50

சங்கீதம் அதிகாரம் 50

1. வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

2. பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.

3. நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.

4. அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.

5. பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.

6. வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி.(சேலா.)

7. என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.

8. உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

9. உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.

10. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

11. மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

12. நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

13. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

14. நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

16. தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

17. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

18. நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

19. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.

20. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

21. இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

22. தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

23. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =