சங்கீதம் 145 – Psalms Chapter 145

Psalms Chapter 145

சங்கீதம் அதிகாரம் 145

1. ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

2. நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

3. கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.

4. தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

5. உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.

6. ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.

7. அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.

8. கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

9. கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது.

10. கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

11. மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;

12. உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக்குறித்துப் பேசுவார்கள்.

13. உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவுமுள்ளது.

14. கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

15. எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.

16. நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

17. கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

18. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

19. அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.

20. கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.

21. என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fifteen =