சங்கீதம் 92 – Psalms Chapter 92

Psalms Chapter 92

சங்கீதம் அதிகாரம் 92

1. கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,

2. பத்துநரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

3. காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

4. கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.

5. கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

6. மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.

7. துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

8. கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.

9. கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.

10. என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.

11. என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

12. நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

13. கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

14. கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

15. அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 2 =