சங்கீதம் 49 – Psalms Chapter 49

Psalms Chapter 49

சங்கீதம் அதிகாரம் 49

1. ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

2. பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.

3. என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

4. என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.

5. என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில் நான் பயப்படவேண்டியதென்ன?

6. தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,

7. ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,

8. எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே.

9. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.

10. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

11. தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.

12. ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

13. இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்.(சேலா.)

14. ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

15. ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)

16. ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.

17. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.

18. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழந்தாலும்,

19. அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.

20. கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =