சங்கீதம் 38 – Psalms Chapter 38

Psalms Chapter 38

சங்கீதம் அதிகாரம் 38

1. கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.

2. உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

3. உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.

4. என் அக்கிரமங்கள் என் தலைக்குமேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று.

5. என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

6. நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

7. என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.

8. நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

9. ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.

10. என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.

11. என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

12. என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

13. நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.

14. காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகளில்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்.

15. கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு அருளினீர்.

16. அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.

17. நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.

18. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.

19. என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

20. நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.

21. கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.

22. என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =