சங்கீதம் 34 – Psalms Chapter 34

Psalms Chapter 34

சங்கீதம் அதிகாரம் 34

1. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

3. என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.

4. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

5. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.

6. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

7. கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.

8. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

9. கர்த்தருடைய பரிசுத்தவான்களே அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.

10. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

11. பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

12. நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?

13. உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.

14. தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.

15. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

16. தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

17. நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

18. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

19. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

20. அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.

21. தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

22. கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + one =