1 நாளாகமம் 28 – 1 Chronicles Chapter 28

1 Chronicles Chapter 28

1 நாளாகமம் அதிகாரம் 28

1. கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

2. அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலுூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.

3. ஆனாலும் தேவன் நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.

4. இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாயிருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவன் தகப்பனுடைய வீட்டாரில் எல்லாம் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் அவன் தகப்பன் குடும்பத்தையும் தலைமையாக தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என் தகப்பனுடைய குமாரருக்குள் என்மேல் பிரியம் வைத்தார்.

5. கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

6. அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

7. இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.

8. இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

9. என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

10. இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

11. தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானம் இருக்கவேண்டிய மாதிரியையும்,

12. ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

13. ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.

14. அவன் பற்பல வேலைக்கு வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்குவேண்டிய சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக, நிறையின்படி வெள்ளியையும்,

15. பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,

16. சமுகத்தப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேைஐகளுக்கு வேண்டிய வெள்ளியையும்,

17. முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும்,

18. தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,

19. இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.

20. தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

21. இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 15 =