ஆதியாகமம் 33 – Genesis Chapter 33

Genesis Chapter 33

ஆதியாகமம் அதிகாரம் 33

1. யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

2. பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:

3. தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.

4. அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

5. அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.

6. அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள்.

7. லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்

8. அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

9. அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.

10. அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

11. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

12. பின்பு அவன்: நாம் புறப்பட்டுப் போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.

13. அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

14. என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால் நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.

15. அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

16. அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப் போனான்.

17. யாக்கோபு சுக்கோத்துக்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

18. யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

19. தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,

20. அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + two =