1 நாளாகமம் 16 – 1 Chronicles Chapter 16

1 Chronicles Chapter 16

1 நாளாகமம் அதிகாரம் 16

1. அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

2. தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,

3. புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும் ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

4. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.

5. அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,

6. பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.

7. அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:

8. கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

9. அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

10. அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

11. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

12. அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

13. அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

14. அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

15. ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

16. அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.

17. அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

18. உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

19. அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

20. அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

21. அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துகொண்டு:

22. நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.

23. பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.

24. ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச்சொல்லுங்கள்.

25. கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

26. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.

27. மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.

28. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

29. கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

30. பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.

31. வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.

32. சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.

33. அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.

34. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

35. எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.

36. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.

37. பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,

38. எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.

39. கிபியோனிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,

40. அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து,

41. இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும் கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,

42. பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல்காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.

43. பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twenty =