வெளிப்படுத்தின விசேஷம் 14 – Revelation Chapter 14

Revelation Chapter 14

வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 14

1. பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.

2. அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.

3. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.

4. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.

5. இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

6. பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

7. மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.

8. வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.

9. அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,

10. அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

11. அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

12. தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.

13. பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.

14. பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.

15. அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.

16. அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

17. பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.

18. அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.

19. அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.

20. நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =