வெளிப்படுத்தின விசேஷம் 15 – Revelation Chapter 15

Revelation Chapter 15

வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 15

1. பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.

2. அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.

3. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

4. கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

5. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;

6. அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.

7. அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.

8. அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =