பிரசங்கி 1 – Ecclesiastes Chapter 1

Ecclesiastes Chapter 1

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

பிரசங்கி அதிகாரம் 1

1. தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.

2. மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

3. சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?

4. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

5. சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது.

6. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.

7. எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

8. எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.

9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.

11. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.

12. பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.

13. வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

14. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

15. கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.

16. இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.

17. ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.

18. அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =