2 இராஜாக்கள் 3 – 2 Kings Chapter 3

2 Kings Chapter 3

2 இராஜாக்கள் அதிகாரம் 3

1. யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு; வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

2. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப் போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.

3. என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக் கொண்டிருந்தான்.

4. மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.

5. ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்.

6. அக்காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்துப்போய்;

7. மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.

8. எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான்.

9. அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.

10. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.

11. அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.

12. அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.

13. எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.

14. அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

15. இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,

16. அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.

17. நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18. இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.

19. நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.

20. மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.

21. தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.

22. மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின் மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.

23. அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.

24. அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,

25. பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.

26. யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.

27. அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாக பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பி விட்டார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =