2 இராஜாக்கள் 19 – 2 Kings Chapter 19

2 Kings Chapter 19

2 இராஜாக்கள் அதிகாரம் 19

1. ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2. அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான்.

3. இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

4. ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளின் நிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

5. இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

6. அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

7. இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

8. அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

9. இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

10. நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.

11. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?

12. என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

13. ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான்.

14. எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

15. கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

16. கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

17. கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

18. அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

19. இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

20. அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

21. அவனைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

22. யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

23. உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத்; தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

24. நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

25. நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள் முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

26. அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.

27. உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

28. நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

29. உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

30. யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.

31. மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

32. ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.

33. அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.

34. என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

35. அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும் போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

36. அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப் போய் நினிவேயில் இருந்துவிட்டான்.

37. அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசாத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =