யாத்திராகமம் 38 – Exodus Chapter 38

Exodus Chapter 38

யாத்திராகமம் அதிகாரம் 38

1. தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

2. அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி,

3. அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

4. வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,

5. அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,

6. அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,

7. பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.

8. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.

9. பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.

10. அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

11. வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறுமுழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.

12. மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

13. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.

14. ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

15. பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

16. சுற்றுப்பிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.

17. தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.

18. பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.

19. அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

20. வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.

21. மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.

22. யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

23. அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.

24. பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது.

25. சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.

26. எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.

27. அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.

28. அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.

29. காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.

30. அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,

31. சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =