2 இராஜாக்கள் 14 – 2 Kings Chapter 14

2 Kings Chapter 14

2 இராஜாக்கள் அதிகாரம் 14

1. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான்.

2. அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் யொவதானாள்.

3. அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.

4. மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

5. ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

6. ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.

7. அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.

8. அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான்.

9. அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.

10. நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமைபாராட்டிக் கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

11. ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,

12. யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

13. அகசியாவின் குமாரனாகிய யோவாசின் குமாரன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,

14. கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.

15. யோவாஸ் செய்த மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு யுத்தம்பண்ணின விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

16. யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

17. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

18. அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

19. எருசலேமிலே அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,

20. குதிரைகள்மேல் அவனை எடுத்துக் கொண்டுவந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

21. யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

22. ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக்கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

23. யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு,

24. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.

25. காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துகொண்டான்.

26. இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.

27. இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து கொலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.

28. யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

29. யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =