2 நாளாகமம் 15 – 2 Chronicles Chapter 15

2 Chronicles Chapter 15

2 நாளாகமம் அதிகாரம் 15

1. அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,

2. அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

3. இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

4. தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

5. அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

6. ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.

7. நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.

8. ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,

9. அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.

10. ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,

11. தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,

12. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;

13. சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,

14. மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.

15. இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள், தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.

16. தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆறண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

17. மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவினின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.

18. தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

19. ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =