2 நாளாகமம் 16 – 2 Chronicles Chapter 16

2 Chronicles Chapter 16

2 நாளாகமம் அதிகாரம் 16

1. ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்.

2. அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:

3. எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டுவிலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.

4. பெனாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.

5. இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.

6. அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

7. அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.

8. மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லுூபியரும் மகா சேனையாயிருந்தார்களல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.

9. தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

10. அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.

11. ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

12. ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

13. ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.

14. தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =