எரேமியா 19 – Jeremiah Chapter 19

Jeremiah Chapter 19

எரேமியா அதிகாரம் 19

1. கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,

2. கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

3. நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

4. அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும்,

5. தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.

6. ஆகையால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்.

7. அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி, அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக்கொடுத்து,

8. இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

9. அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,

10. உன்னோடேகூட வந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,

11. அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

12. இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.

13. எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

14. பின்பு எரேமியா, கர்த்தர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருத்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து:

15. இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =