2 இராஜாக்கள் 4 – 2 Kings Chapter 4

2 Kings Chapter 4

2 இராஜாக்கள் அதிகாரம் 4

1. தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.

2. எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.

3. அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,

4. உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.

5. அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.

6. அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று; போயிற்று.

7. அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.

8. பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.

9. அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.

10. நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.

11. ஒருநாள் அவன் அங்கே வந்து, அந்த அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.

12. அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக் கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக் கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.

13. அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.

14. அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.

15. அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்ட போது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.

16. அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.

17. அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள்.

18. அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது,

19. தன் தகப்பனைப் பார்த்து: ஏன் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.

20. அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.

21. அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்,

22. தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

23. அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,

24. கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

25. கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.

26. நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொல்லி,

27. பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்து வைத்தார் என்றான்.

28. அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.

29. அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய்; என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான்.

30. பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.

31. கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டுவந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.

32. எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.

33. உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து,

34. கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக் கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.

35. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.

36. அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது ; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்.

37. அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக் கொண்டு வெளியே போனாள்.

38. எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான்.

39. ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடி நிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.

40. சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக் கூடாமல்; தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.

41. அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று.

42. பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.

43. அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

44. அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + three =