2 Kings Chapter 21
2 இராஜாக்கள் அதிகாரம் 21
1. மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.
2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,
3. தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.
4. எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,
5. கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,
6. தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்கு கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
7. இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.
8. நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.
9. ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.
10. ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:
11. யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்,
12. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,
13. எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.
14. அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தின் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.
15. தங்கள் பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போவார்கள் என்றார்.
16. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.
17. மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
18. மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான்.
19. ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.
20. அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,
21. தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு,
22. கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.
23. ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.
24. அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
25. ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
26. அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.