2 இராஜாக்கள் 11 – 2 Kings Chapter 11

2 Kings Chapter 11

2 இராஜாக்கள் அதிகாரம் 11

1. அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

2. யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்து வைத்தார்கள்.

3. இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.

4. ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

5. அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.

6. மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.

7. இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.

8. நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன்; கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.

9. ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.

10. ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.

11. காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம்தொடங்கி அதின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.

12. அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.

13. ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,

14. இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

15. ஆசாரியனாகிய யோய்தா ராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

16. அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.

17. அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,

18. பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்று போட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.

19. நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப் பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

20. தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.

21. யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 19 =