2 நாளாகமம் 7 – 2 Chronicles Chapter 7

2 Chronicles Chapter 7

2 நாளாகமம் அதிகாரம் 7

1. சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

2. கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.

3. அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்துபணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.

4. அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.

5. ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

6. ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

7. சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.

8. அக்காலத்தில்தானே சாலொமோனும் ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,

9. எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்புநாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.

10. ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடைகொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.

11. இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.

12. கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.

13. நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது,

14. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

15. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.

16. என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.

17. உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,

18. அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன்.

19. நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்குமுன் வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,

20. நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.

21. அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச்செய்தது என்ன என்று கேட்பான்.

22. அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =