2 நாளாகமம் 14 – 2 Chronicles Chapter 14

2 Chronicles Chapter 14

2 நாளாகமம் அதிகாரம் 14

1. அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.

2. ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

3. அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

4. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,

5. யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

6. கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

7. அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.

8. யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள்.

9. அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.

10. அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.

11. ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

12. அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.

13. அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,

14. கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.

15. மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =