1 சாமுவேல் 22 – 1 Samuel Chapter 22

1 Samuel Chapter 22

1 சாமுவேல் அதிகாரம் 22

1. தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

2. ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.

3. தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,

4. அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.

5. பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

6. தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,

7. சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?

8. நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.

9. அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.

10. இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.

11. அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.

12. அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.

13. அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.

14. அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?

15. இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.

16. ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.

17. பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.

18. அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.

19. ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.

20. அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,

21. சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.

22. அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.

23. நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =