1 நாளாகமம் 11 – 1 Chronicles Chapter 11

1 Chronicles Chapter 11

1 நாளாகமம் அதிகாரம் 11

1. இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.

2. சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டுவருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.

3. அப்படியே இஸ்ரவேலின் மூப்பரெல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.

4. பின்பு தாவீது இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்குப் போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்.

5. அப்பொழுது எபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

6. எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.

7. தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.

8. பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.

9. தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

10. கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,

11. தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக்கொன்றுபோட்டான்.

12. இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.

13. பெலிஸ்தர் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோது ஜனம் பெலிஸ்தரைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடே அங்கே இருந்தான்.

14. அப்பொழுது அவர்கள் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தரை மடங்கடித்தார்கள். அதினாலே கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.

15. முப்பது தலைவரில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் கெபியிலிருக்கிற தாவீதினிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் பாளயம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,

16. தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.

17. தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

18. அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

19. நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

20. யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை மடங்கடித்ததினால் இந்த மூன்றுபேரில் பேர்பெற்றவனானான்.

21. இந்த மூன்றுபேரில் அவன் மற்ற இரண்டுபேரிலும் மேன்மையுள்ளவனானதினால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமானமானவனல்ல.

22. பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும், கப்சேயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல் உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.

23. ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி, இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

24. இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.

25. முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

26. இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,

27. ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,

28. தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,

29. ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,

30. நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,

31. பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,

32. காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,

33. பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய எலியாபா,

34. கீசோனியனாகிய ஆசேமின் குமாரர் ஆராரியனாகிய சாகியின் குமாரன் யோனத்தான்.

35. ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் எலிபால்,

36. மெகராத்தியனாகிய ஏப்பேர், பெலோனியனாகிய அகியா,

37. கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,

38. நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,

39. அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,

40. இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,

41. ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,

42. ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள்.

43. மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,

44. அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும்,

45. சிம்ரியின் குமாரன் எதியாயேல், தித்சியனாகிய அவன் சகோதரன் யோகா,

46. மாகாவியரின் புத்திரன் எலியேல், எல்நாமின் குமாரர் எரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,

47. மெசோபாயா ஊராராகிய எலியேலும், ஓபேதும், யாசியேலுமே.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =