யோசுவா 14 – Joshua Chapter 14

Joshua Chapter 14

யோசுவா அதிகாரம் 14

1. கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

2. ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

3. மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.

4. மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

5. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.

6. அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

7. தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

8. ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

9. அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

10. இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

11. மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

12. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

13. அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

14. ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

15. முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =