யோசுவா 20 – Joshua Chapter 20

Joshua Chapter 20

யோசுவா அதிகாரம் 20

1. கர்த்தர் யோசுவாவை நோக்கி:

2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

3. அவைகள் உங்களுக்கு இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.

4. அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.

5. பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

6. நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக் கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.

7. அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

8. எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.

9. கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும் வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய்; ஒதுங்கும்படி இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =